×

கீழடி தொல்பொருட்களை இனி 3டியில் பார்க்கலாம்

சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்தில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் தொல்லியல் துறையினர் பொருட்களை காட்சிப்படுத்தியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது.

தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கீழடி அருங்காட்சியகம் வந்து, தமிழர்களின் வரலாற்றுப் பெருமை சொல்லும் தொல்பொருட்களைப் பார்த்துச் செல்கின்றனர்.
அருங்காட்சியகத்தில் ஆறு கட்டிட தொகுதிகளில் தொல்பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிட தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி பொருட்கள் பற்றிய அனிமேஷன் படங்களும் மெகா சைஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பார்வையாளர்களை கவர ஏற்கனவே மெய்நிகர் காட்சிகள், ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது தொல்லியல் துறை ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். முப்பரிமாண தோற்றத்தில் பொருட்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ஒளிபரப்பப்படுவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

கீழடி அருங்காட்சியகத்தில் தற்போது 13 ஆயிரத்து 608 பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் இருந்து குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் கண்டு ரசிக்கும் வகையில் தொல்லியல் துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

The post கீழடி தொல்பொருட்களை இனி 3டியில் பார்க்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District ,Tirupuvanam ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்